கோவிலில் கொடிமரம் எதற்கு ?

0
730

கோயிலில் கொடிமரம் இருப்பது “ஆலயம் புருஷாகாரம்’ என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது.
மனித உடலைப் போன்றது கோயில்.
கோயிலில் கருவறையே தலை.
மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்பதாகும்.

அதனைத் தொடர்ந்து, வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம்.

ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழாகாலத்தில் தேவர்களை அழைப்பதற்காகக் கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர் என்பதே கொடிமரத்தின் தத்துவமாகும்.

கோவிலுக்குள் நுளைந்ததும் நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும்.

துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது.

நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன.
நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன.
அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.
பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும், கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள்.

அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் இதற்கு சமபீடத்தில், சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

இதன்மூலம் கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.

சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை மூலவரை நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.

சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்து கொடி மரங்கள் தயாரிக்கப்படுகிறது.

திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர் பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் எழுந்தருளி அருள் பாலிக்கப்போகிறார் என்பதே.

துவஜஸ்தம்பம் எனப்படும் கொடி மரத்தில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தக் கொடிமரத்தடியில்தான் கீழே விழுந்து வணங்க வேண்டும் .
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் , பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யலாம் .
அஷ்டாங்கம் என்பது தலை , கைகள் , காதுகள் , முழங்கால்கள் ஆகிய ஒன்பதும் தரையில்படுமாறு விழுந்து வணங்குதல் ,

பஞ்சாங்கம் என்பது கைகள் , முழங்கால்கள் , தலை ஆகிய ஐந்தும் தரையில் படுமாறு குனிந்து வணங்குதல் .

கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்து வணங்க வேண்டும் . அதற்குக் குறையக் கூடாது . கிழக்கு நோக்கிய சந்நிதி எனில் வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டி வணங்க வேண்டும் . வடக்கில் சந்நிதி எனில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும் .

இறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் அட்டவணை கீழே.

வரிசை இறைவன்- கொடி
1 சிவபெருமான்- நந்திக் கொடி
2 திருமால்- கருடக் கொடி
3 சூரிய தேவன்- வியோமாக் கொடி
4 வருண தேவன்- அன்னக் கொடி
5 குபேரன்- நரன் கொடி
6 முருகன்- சேவல் கொடி
7 விநாயகன்- மூசிக கொடி
8 இந்திரன்- யானைக் கொடி
9 யமன்- எருமைக் கொடி
10 துர்கை- சிம்மக் கொடி

11 சனி பகவான்- காக்கைக் கொடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 31 = 32